சிவபெருமான் திரிபுராந்தகர்களை அழிக்க போர்க்கோலத்தில் புறப்பட்ட போது, தமது கையில் வில்லை ஏந்தி இத்தலத்தில் காட்சி அளித்ததால் இத்தலம் 'திருவிற்கோலம்' என்று அழைக்கப்படுகிறது. மூலவரும் 'திரிபுராந்தகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'திரிபுராந்தகேஸ்வரர்', 'திருவிற்கோலநாதர்' என்னும் திருநாமங்களுடன் பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அகலமான பெரிய பாணம். அம்பாள் 'திரிபுராந்தகியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர், நடராஜர், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகின்றார்.
சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின்போது ஒருநாள் சுவாமி கையில் வில்லை ஏந்தியபடி காட்சி அளிக்கும் திருவிழா நடைபெறுகிறது.
சுமார் 100 ஆண்டுகள் முன்பு வரை சென்னையில் புண்ணிய நதியாக ஓடிக் கொண்டிருந்த கூவம் நதி இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|